×

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் இரும்புக்கடையில் திடீர் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் நாசம்

செங்கல்பட்டு அக். 9: செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் உள்ள இரும்புக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை திம்மாவரம் பகுதியில் செங்கல்பட்டு  அனுமந்த பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் குருசாமி (75). அதே பகுதியில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய இரும்புகடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஆயுதபூஜை என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், குருசாமியின் கடையில் இருந்து, மாலையில் திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில், தீப்பற்றி கடை முழுவதும் எரிந்தது.
உடனே, அக்கம் பக்கத்தினர் குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் அங்கு சென்றார்.

கடையை சுற்றி தகரத்தில் செய்யப்பட்ட ஷீட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் ஆகியவை கடையின் உள்ளே இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நேரத்தில் கடும் வெயில் காரணமாக இரும்பு கடையில் இருந்த தீயால், அருகில் உள்ள 3 விடுகளின் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது. ஏசியிலும் தீ பரவியது. இதனால் அங்கு வசித்தவர்கள், அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, யாரேனும் முன் விரோதத்தில் இரும்பு கடைக்கு தீ வைத்தார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இந்த தீ விபத்தில் ₹3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Tags : Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!